search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழிலாளி உடல்"

    மேகாலயாவில் கடந்த மாதம் வெள்ள நீர் சூழ்ந்ததால் நிலக்கரி சுரங்கத்தினுள் சிக்கிய 15 தொழிலாளர்களில் ஒருவரது உடலை, கடற்படையின் நீர்மூழ்கி வீரர்கள் மீட்டுள்ளனர். #MeghalayaCoalMine #NavyDivers
    புதுடெல்லி:

    மேகாலயாவில், கிழக்கு ஜைன்டியா மாவட்டம் லும்தாரி கிராமத்தில் சட்டவிரோதமாக நிலக்கரி சுரங்கம் இயங்கி வந்தது. கடந்த டிசம்பர் மாதம் 13-ம் தேதி தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தபோது, சுரங்கத்தின் அருகில் உள்ள லிட்டின் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பின்னர் வெள்ள நீர் சுரங்கத்தினுள் புகுந்தது. இதனால் சுமார் 15 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்க தேசிய பேரிடர் மீட்பு படையினரும், மாநில பேரிடர் மீட்பு படையினரும், போலீசாரும் களத்தில் இறங்கினர்.

    தொடர்ந்து மழை பெய்ததால் வெள்ள நீரை வெளியேற்ற முடியாத நிலை ஏற்பட்டது. தேசிய பேரிடர் மீட்புப்படையினர் குறிப்பிட்ட தூரம் வரை மட்டுமே நீருக்குள் இறங்க முடியும் என்பதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது. பின்னர் நீச்சல் வீரர்கள் அடங்கிய வல்லுநர் குழுவை இந்திய கடற்படை அனுப்பி வைத்தது. அவர்கள் அங்கு சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். சுரங்கம் முழுவதும் தண்ணீர் நிரம்பியதால், தொழிலாளர்கள் உயிர்பிழைக்க வாய்ப்பு இல்லை.



    இந்நிலையில், சுரங்கத்தினுள் சிக்கிய தொழிலாளர்களில் ஒருவரின் உடலை கடற்படையின் நீர்மூழ்கி வீரர்கள் இன்று மீட்டுள்ளனர். ரிமோட் மூலம் இயங்கக்கூடிய ஆர்ஓவி எனும் நீர்மூழ்கி உபகரணம் மூலம் தொழிலாளியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 200 அடி ஆழத்தில் இருந்து மீட்கப்பட்ட அவரது உடல், எலிப்பொந்து என்று அழைக்கப்படும் சுரங்கத்தின் முகப்பு பகுதிக்கு கொண்டு வரப்பட்டது. மற்ற தொழிலாளர்கள் என்ன ஆனார்கள் என தெரியாத நிலையில், மீட்பு பணி தொடர்ந்து நடைபெறுகிறது.  #MeghalayaCoalMine #NavyDivers
    ஆந்திராவில் துப்பாக்கி சூட்டில் பலியான ஜவ்வாதுமலை தொழிலாளியின் உடலை சாலை வசதி இல்லாததால் 5 கிலோ மீட்டர் தூரம் சுமந்துசென்ற அவல நிலை ஏற்பட்டுள்ளது. #RedSandersSmuggling
    போளூர்:

    ஆந்திராவில் ஸ்ரீகாளஹஸ்தி அடுத்த கொல்லப்பல்லி வனப்பகுதியில் கடந்த 31-ந் தேதி இரவில் செம்மரங்களை வெட்டி கடத்த முயன்ற கும்பலை வனத்துறையினர் சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர். அப்போதைய துப்பாக்கிச்சூட்டில் திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையில் உள்ள கானமலை கிராமத்தை சேர்ந்த காமராஜ் என்பவர் பலியானார்.

    இந்த என்கவுண்டரில் சந்தேகம் இருப்பதாகவும் காமராஜ் உடலை மறு பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் மக்கள் கண்காணிப்பகம் சார்பில் இறந்தவரின் உறவினர்கள் ஆந்திர மாநில ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மாநில முதன்மை செயலாளர் உட்பட 9 பேர் விளக்கமளிக்க உத்தரவு பிறப்பித்தது.

    மேலும், அதுவரை இறந்த காமராஜின் உடலை ஸ்ரீ காளஹஸ்தி அரசு ஆஸ்பத்திரியில் வைக்க உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து சமீபத்தில் நடந்த வழக்கு விசாரணையின்போது நீதிபதி, காமராஜ் உடலை மறுபிரேத பரிசோதனை செய்து அறிக்கை சமர்பிக்க உத்தரவிடப்பட்டது.

    அதன்படி, காளஹஸ்தி அரசு ஆஸ்பத்திரியில் தலைமை மருத்துவர் முன்னிலையில் இறந்த காமராஜின் உடல் மறு பிரேதபரிசோதனை செய்யப்பட்டது.தொடர்ந்து வக்கீல் ரவி முன்னிலையில் ஸ்ரீகாளஹஸ்தி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதர்சன்பிரசாத், காமராஜின் உடலை அவருடைய மகன் ராமராஜனிடம் ஒப்படை த்தார்.

    காமராஜின் உடல் சொந்த ஊரான கானமலைக்கு கொண்டு செல்லப்பட்டது. கானமலை கிராமத்திற்கு சாலை வசதி இல்லாததால், ஆம்புலன்சில் சென்ற உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட முடியவில்லை. இதையடுத்து, கம்பில் துணியை கட்டி டோலி அமைத்து அதற்குள் உடலை வைத்து சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு கரடு முரடான மலைப்பாதை வழியாக அவரது வீட்டுக்கு உறவினர்கள் சுமந்து சென்றனர்.

    பின்னர் இறுதி சடங்குகள் செய்யப்பட்டது. #RedSandersSmuggling
    ஆந்திராவில் துப்பாக்கி சூட்டில் பலியான திருவண்ணாமலை தொழிலாளியின் உடலை வாங்க மறுப்பு தெரிவித்துள்ள உறவினர்கள் மீண்டும் பிரேத பரிசோதனை நடத்த வலியுறுத்தி உள்ளனர். #RedSandersSmuggling
    ஸ்ரீகாளஹஸ்தி:

    ஸ்ரீகாளஹஸ்தி மண்டலம் கொல்லப்பள்ளி வனப்பகுதியில் செம்மரம் வெட்டிய கும்பல் மீது கடப்பா மாவட்டம் ரெயில்வே கோடூர் வனத்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

    இதில் திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் அருகே உள்ள கானமலை கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி காமராஜ் (வயது 53) என்பவர் பலியானார். அவருடன் வந்தவர்கள் தப்பி ஓடி விட்டனர்.

    துப்பாக்கிச்சூட்டில் பலியான காமராஜின் பிணத்தை ஸ்ரீகாளஹஸ்தி அரசு ஆஸ்பத்திரியில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

    தகவல் அறிந்ததும், பிணத்தை வாங்குவதற்காக காமராஜின் மனைவி காமாட்சி, மகன்கள் ராமராஜ், சசி மற்றும் உறவினர்கள் நேற்று முன்தினம் இரவு ஸ்ரீகாளஹஸ்தி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து கதறி அழுதனர்.

    அவர்களிடம், ஸ்ரீகாளஹஸ்தி புறநகர் போலீசார், பிரேதப் பரிசோதனை முடிந்து விட்டதாகவும், உடனடியாக பிணத்தை எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் கட்டாயப்படுத்தி உள்ளனர். காமராஜ் இறந்ததில் சந்தேகம் இருப்பதாகவும். மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும். அதுவரை உடலை வாங்க மாட்டோம் என அவர்கள் தெரிவித்தனர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த போலீசார், காமராஜின் உறவினர்களை தாக்கியும், ‘பூட்ஸ்’ காலால் எட்டி உதைத்தும், பிணத்தை உடனடியாக எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் மிரட்டியதாக கூறப்படுகிறது. அப்போது காமராஜின் உறவினர்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    காமராஜ் உடலை வாங்க மறுத்ததால் அவரது உடல் காளஹஸ்தி ஆஸ்பத்திரியிலேயே வைக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து காமராஜின் மகன்கள் ராமராஜ், சசி ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    எங்களின் தந்தை காமராஜ் சென்னையில் கட்டிட வேலைகளுக்கும், கேரளாவில் கூலி வேலைக்கும் செல்வது வழக்கம். கடந்த சில நாட்களுக்கு முன்பு கட்டிட வேலைக்குச் செல்வதாக தான் வீட்டில் கூறி விட்டுச் சென்றார். ஆனால், திருவண்ணாமலை போலீசார் எங்களின் தந்தை காமராஜ் ஆந்திர வனத்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டு உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

    அந்தத் தகவலை கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்த நாங்கள் அன்று இரவே ஸ்ரீகாளஹஸ்தி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தோம். அங்கிருந்த ஸ்ரீகாளஹஸ்தி புறநகர் போலீசார் எங்களிடம் அவசர அவசரமாக கையெழுத்துப் பெற்றுக்கொண்டு பிணத்தை உடனே எடுத்துச் செல்ல வேண்டும் என வற்புறுத்தினர். எங்கள் தந்தையின் சாவில் மர்மம் உள்ளது.

    எங்களுக்கு தகவல் வந்தது மதியம் 2 மணிக்கு, ஆனால் அவர் இறந்ததற்கான முதல் தகவல் அறிக்கை போலீஸ் நிலையத்தில் அதிகாலை 2.30 மணிக்கு தான் பதிவு செய்யப்பட்டுள்ளது. சுட்டுக் கொல்வதற்கு முன்பாகவே எங்களின் தந்தையை பிடித்து, அவரிடம் பெயர், ஊர் விவரம் போன்ற தகவல்களை சேகரித்துக் கொண்டு அதன் பிறகு சுட்டுக் கொன்றார்களா அல்லது இறந்தவரே போலீசாரின் முன் தோன்றி முகவரியை சொன்னாரா? எனச் சந்தேகம் எழுந்துள்ளது.

    எங்களின் தந்தையை பிடித்துச் சென்று, வேண்டும் என்றே வனத்துறையினர் சுட்டுக்கொன்றுள்ளனர். இதுதொடர்பாக போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், போலீசார் எங்களின் கோரிக்கையை ஏற்காமல் மிரட்டல் விடுத்து வருகின்றனர்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    காமராஜ் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது மருமகன் அய்யப்பன் (வயது 30) நேற்று திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமியிடம் புகார் மனு அளித்தார்.

    அதில் எனது மாமனாரை அதிரடிப்படையினர் கொடுமையான முறையில் சித்ரவதை செய்து மனித உரிமைகள் மீறும் வகையில் செயல்பட்டு துப்பாக்கியில் சுட்டு கொலை செய்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தேன்.

    மேலும் எனது மாமனார் எப்படி இறந்தார் என்ற விவரத்தை கூறாமலும், இறந்தவரின் உடலில் உள்ள தடயங்களை மறைக்கும் வகையில் எங்களிடம் எந்தவித அனுமதியும் பெறாமல் பிரேத பரிசோதனை செய்தும், நாங்கள் மலைவாழ் பழங்குடி இன மக்கள் என்பதால் மிரட்டி உண்மையை மறைத்து விடலாம் என்ற நோக்கத்தில் ஆந்திரா போலீசார் முயற்சித்து வருகின்றனர் எனக் கூறியுள்ளார்.  #RedSandersSmuggling
    ×